வெள்ளி, 29 நவம்பர், 2013

கபிலரின் பூக்கள் - 11 - கூவிளம் - Aegle marmelos

தாவரப்பெயர்Aegle marmelos

வளரியல்பு: மரம்

தற்போதைய பெயர்வில்வம்

இலக்கியம் :
கூவிளங்கண்ணி கொடும்பூண் எழினி - புறநானூறு 158
கடையெழு வள்ளல்களில் ஒருவனான எழினியின் குடிப்பூ கூவிளம்
 
தன்மைகள்
வில்வம் சிறு முட்களுடன் வளரும் மரம். இதன் இலை, பழம் மற்றும் மரத்தின் பாகங்கள் மருத்துவ தன்மை வாய்ந்தவை.

நன்றி: விக்கிபீடியா, Tamil Lexicon, http://www.flowersofindia.net/

கபிலரின் பூக்கள் - 10 - உந்தூழ் - Bambusa arundinacea





தாவரப்பெயர்Bambusa arundinacea

வளரியல்பு: புதர்

தற்போதைய பெயர்பெருமூங்கில்

இலக்கியம் :  உரிதுநா றவிழ் தொத் துந்தூழ் கூவிளம் (குறிஞ்சிப். 65)

தன்மைகள்
உந்தூழ் என்பது வெடித்துச் சிதறி விதை பரப்பும் செடியினம். ஊழ் என்னும் சொல் முளையில் தோன்றும் கருமரபைக் குறிக்கும்.

நன்றி: விக்கிபீடியா, http://www.flowersofindia.net/

புதன், 9 அக்டோபர், 2013

களவும் கற்று மற


' திருட்டுத் தொழிலைக் கூட கற்றுக்கொண்டு பின்னர் மறந்துவிடு.' - இதுவா இதன் பொருள்?

 எப்படி இதுபோன்ற பொருளில் பழமொழிகள் உலாவருகின்றன என்பதே தெரியவில்லை. இப்படித் தவறான பழமொழிகள் புழங்குவதால் தான் சமுதாயத்தில் ஒழுக்கம் குன்றி தவறுகள் அதிகரித்து விட்டன. 'ஏன் தவறு செய்கிறாய்?' என்று கேட்டால், 'களவும் கற்று மற' என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்களே அதனால் நானும் இந்தத் தவறை ஒருமுறை செய்துவிட்டு பின்னர் மறந்துவிடுகிறேன் என்று சாக்கு சொல்லுகிறார்கள். 

அக்காலத்திலும் சரி இக்காலத்திலும் சரி செய்யக்கூடாத தவறுகள் பட்டியலில் 'திருட்டு, சூது' ஆகியவை அடங்கும். இந்த இரண்டு தவறுகளும் ஒரு மனிதனை எந்த நிலைக்குக் கொண்டுசெல்லும் என்பதை இங்கே சொல்லத் தேவையில்லை. ஏனென்றால் அது உலகறிந்த உண்மை. திருட்டு என்பது பிறருக்கு உரிமை உடைய பொருளை அவருக்குத் தெரியாமல் தான் எடுத்துக் கொள்வது ஆகும். சூது என்பது பிறருக்குச் சொந்தமான பொருளை தந்திரத்தால் ஏமாற்றித் தான் கொள்வதாகும். தாயக்கட்டைகளை உருட்டி விளையாடும் இந்த விளையாட்டிற்கு 'சூதாட்டம்' என்று பெயர். இந்த தந்திரமான விளையாட்டின் அடிப்படையில் தானே 'மகாபாரதம்' உருவானது. துரியோதனன் துகில் உரிப்பதற்கும் பாஞ்சாலி சபதம் செய்ததற்கும் அடிப்படையே இந்த விளையாட்டு தானே.
இதைப் பற்றி ' சூது' என்னும் தலைப்பில் பத்து குறள்களில் மிக அருமையாக விளக்கியுள்ளார் திருவள்ளுவர். சூது விளையாடியவனின் நிலை பற்றி ஒரு குறளில் வள்ளுவர் இவ்வாறு கூறுகிறார்.

'
கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.' - குறள் எண்: 935.

இங்கே 'கவறு' என்பது 'சூதாடும் கருவியையும்', 'கழகம்' என்பது 'சூதாடும் இடத்தையும்' குறிக்கும். ' சூதாடும் கருவியையும் சூதாடும் இடத்தையும் தம் கைகளையும் நம்பி மேல்சென்றவர்கள் ஒன்றும் இல்லாதவராய் ஆவர்.' என்பதே இக்குறளின் பொருள் ஆகும். சூதாடும் கருவியைக் குறிக்கும் இந்த 'கவறு' என்னும் சொல்லை 'கற்று' என்று பழமொழியில் பிழையாக எழுதியதால் தான் தவறான பொருள்கோளுக்கு வழிவகுத்து விட்டது. களவுத்தொழிலைக் கையால் தான் செய்யவேண்டும். அதேபோல சூது விளையாட்டையும் முழுக்க முழுக்க கைகளால் தான் ஆடவேண்டும். ' இந்த இரண்டையும் கையில் தொடாமல் இரு' என்பதே இப்பழமொழியில் பெரியவர்கள் கூற வரும் அறிவுரை ஆகும். இனி சரியான பழமொழி இது தான்:

'
களவும் கறு மற.'
(
கவறு மற = கவறும்+அற; அற - தவிர்)

நன்றி: thiruththam.blogspot

புதன், 2 அக்டோபர், 2013

ஆமை புகுந்த வீடு உருப்படாது.

torஆமை ஒரு வீட்டிற்குள் புகுந்துவிட்டால் அந்த வீடு உருப்படாமல் போய்விடும்.” என்று இந்த பழமொழிக்குப் பொருள் கொண்டு “ஆமை”யின் மேல் ஒரு “துரதிருஷ்டசாலி” என்னும் பழியையும் சேர்த்துப் போடுகின்றனர் நம் மக்கள். இக்கருத்து சரியாகுமா?. இல்லை. ஆமை என்ன தவறு செய்தது? அதன் மேல் நாம் ஏன் வீண்பழி போடவேண்டும்?. நீர்நிலைகளில் வசிக்கும் இயல்புடைய ஆமை நமது வீட்டிற்கு ஏன் வரவேண்டும்?. சரி தவறுதலாக எப்படியோ ஒரு ஆமை நமது வீட்டிற்குள் புகுந்து விட்டால் எப்படி அந்த வீடு உருப்படாமல் போகும்?. மாறாக ஆமை வீட்டிற்குள் புகுந்தால் உங்கள் வீட்டிற்கு இலக்குமி (திருமகள்) வரப்போகிறாள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் ஆமை திருமாலின் அருள் பெற்ற ஒரு உயிரினம் ஆகும். திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றல்லவா இந்த ஆமை அவதாரம். திருமால் இருக்கும் இடம் தானே திருமகள் வாசம் செய்யும் இடம். எனவே இந்த தவறான கருத்தை இன்றோடு கைவிடுங்கள்.

' ஆமை ஒரு வீட்டிற்குள் புகுந்துவிட்டால் அந்த வீடு உருப்படாமல் போய்விடும் ' என்று இந்த பழமொழிக்குப் பொருள் கொண்டு 'ஆமையின்' மேல் ஒரு 'துரதிருஷ்டசாலி' என்னும் பழியைப் போடுகின்றனர் நம் மக்கள்.

அப்படி என்றால் இந்தப் பழமொழியின் உண்மையான பொருள் என்ன?. வழக்கம் போல சொல்பிழைகளால் இந்தப் பழமொழியில் பொருள் மாறுபாடு அடைந்துள்ளது. தூய செந்தமிழ்ச் சொற்கள் கொச்சை வழக்கில் எப்படி எல்லாம் மாறுபாடு அடைகின்றன என்பதற்கு இந்தப் பழமொழியும் ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

உங்களுக்குக் காளானைப் பற்றித் தெரியும். புழுத்துப்போன மரம், மாட்டுச்சாணம், வைக்கோல் முதலான பொருட்களில் இருந்து சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தானாகத் தோன்றும் ஒரு வகைப் பூஞ்சை தான் இது. இருட்டும் ஈரப்பதமும் காளான் தோன்றுவதற்கு ஏற்ற சூழ்நிலைகள். எப்போதுமே இருளாகவும் ஈரமாகவும் மக்கிப்போன பழைய மரங்களுடன் இருக்கும் வீட்டில் காளான் இயல்பாகவே தோன்றும். இது போன்ற வீட்டில் குடி இருப்பவர்கள் உடல்நலத்துடன் இருக்க முடியுமா?. முடியவே முடியாது. ஏனென்றால் இந்தச் சூழ்நிலையில் வசிக்கும் மனிதர்களுக்கு காசநோய், மனநோய், சருமநோய் முதலான பல நோய்கள் தொற்றிக்கொள்ளும். கதிரவனின் ஒளியும் வெப்பமும் இல்லாத வீட்டிற்கு வெளியாட்களும் வர விரும்ப மாட்டார்கள். எனவே இது மாதிரி வீட்டில் வசிப்பவர்கள் கவனிப்பார் யாருமின்றி நோய்வாய்ப்பட்டு மரணத்தைத் தேடிக்கொள்வர். ஆக மொத்தத்தில் காளான் பூத்த இந்த வீடு உருப்படாமலேயே போய்விடும். இதைத்தான் இந்த பழமொழியும் கூறுகிறது. சரியான பழமொழி இது தான்:

' ஆம்பி பூத்த வீடு உருப்படாது.'
(ஆம்பி = காளான்)

இதில் உள்ள தூய தமிழ்ச்சொற்களான 'ஆம்பி பூத்த' என்பன கொச்சைச் சொற்களாக மாறி பின்னர் உருமாறி இறுதியில் மீண்டும் தூய தமிழ் வடிவம் பெற்று இவ்வாறு நிற்கிறது. இந்த வரலாறு கீழே காட்டப்பட்டு உள்ளது.

ஆம்பி பூத்த > ஆமி பூத்த > ஆமெ பூத்த > ஆமெ பூந்த > ஆமை புகுந்த 
நன்றி: thiruththam.blogspot.com

பரிணாம வளர்ச்சி நோக்கி தமிழர் திருமணம்

தொல்காப்பியம் தமிழின் முதல்நூல். தமிழ் மொழிக்குரிய எழுத்து, சொல் ஆகிய இரண்டிற்கும் இலக்கண வகுக்கும் அதே நேரத்தில் தமிழரின் வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுக்கும் நூலுமாகும். தொல்காப்பியம் காட்டும் அகத்திணை மரபுகள் களவியல், கற்பியல் என்ற இரண்டு கூறுகளைக் கொண்டது. தொல்காப்பியப் பொருளதிகாரம் அகம், புறம் எனத் தமிழ்ச் சமூகத்தின் வாழ்வியலையும், களவு, கற்பு எனக் குடும்பவியல் வரலாற்றையும் விளக்கும் மானிடவியல் இலக்கியம் என்று தொல்காப்பியமும், சாரக சம்கிதையும் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார் க. நெடுஞ்செழியன். கற்பியல் முழுவதும் மக்களின் இல்வாழ்க்கையை மையமிட்டதாகவே அமைகிறது.
கற்பு
அன்புடைய தலைவியைப் பெற்றோர் கொடுப்பப் பலரறிய மணந்து வாழும் மனைவாழ்க்கை கற்பெனச் சிறப்பித்துச் சொல்லப்படுகிறது. இவ்வதுவைச் சடங்குடன் தலைமகன் தலைமகளை மணந்துகொள்ளும் சிறப்புடைய நிகழ்ச்சியினைக் கரணம் என்ற சொல்லால் வழங்குவர் தொல்காப்பியர். வரைதலின் சிறப்பு பற்றி,
களவு வெளிப்படுவதற்கு முன் வரைதல், வெளிப்பட்ட பின்னர் வரைதல் என மணம் இருவகையில் நிகழும். உடன்போக்கு நிகழும் காலங்களில் மணம் தலைவன் இல்லதிலேயே நிகழ்வது உண்டு. உலகில் மனிதன் எப்படியாவது வாழ்ந்தால் போதும் என்ற கொள்கையுடன் வாழ்ந்த பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே இப்படித்தான் வாழவேண்டும் என்ற வாழ்வியல் கூறுகளை இலக்கணமாகக் கொண்டு வாழ்ந்தனர் தொல்காப்பியர் காலத் தமிழ் மக்கள் என்ற ஆ.சிவலிங்கனார் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். (ஆ.சிவலிங்கனார், தொல்காப்பிய உரைவளம்,ப.2)
கற்புமணம்
தொல்காப்பியர் மணத்தினைக் களவு மணம், கற்பு மணம் என்று வேறுபடுத்திக் காட்டுகின்றார்.
கற்பெனப்படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே (தொல்.கற்பு - 1)
கற்பு என்று சொல்லப்படுவது சடங்குகளோடு கூடிய திருமண முறை என்றும், கொடுத்தற்குரிய மரபினர் கொடுக்க, கொள்ளுதற்குரிய மரபினர் கொள்வது என்றும் திருமண நிகழ்வின் முறைமையைத் தொல்காப்பியர் எடுத்துரைக்கின்றார்.
சங்க இலக்கியத்தில் திருமண நிகழ்வு
உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவைப்
பொருஞ் சோற்ற மலைநிற்ப நிரைகாற்
.................................................................
பல்லிருங் கதுப்பி னெல்லொடு தயங்க
வதுவை நன்மணங் கழிந்த பின்றை
(அகம்.86) என்று குறிப்பிடப்படுகின்றது.
இப்பாடலடியில் குழந்தைகளைப் பெற்ற வாழ்வரசியர் நால்வர் மணப்பந்தலுக்குள் நுழைவர். பின்பு மணமக்கள் மீது பூவையும் நெல்லையும் தூவி நீராட்டுவர். பின்னர், கற்பினின்று வழுவாது நல்ல பலவாகிய உதவிகளையும் செய்து என்றும் கணவனால் விரும்பப்படும் மனைவியாக இருப்பாயாக என்று வாழ்த்துவர். தலைவனிடம் தலைவியை ஒப்படைத்து வாழ்த்து ஒலி எழுப்புவர். திங்களினை ஒத்த உரோகிணி கூடிய நன்னாளில் அதிகாலையில் திருமணம் நிகழ்ந்துள்ளதனை அறிய முடிகிறது..
"கொடுப்போர் இன்றியும் கரணமுண்டே" (தொல்.கற்பு - 2)
கொடுப்போர் இன்றியும் கரண நிகழ்வு நடைபெறும் என்று கூறுகிறார். காரணம் எப்போது சமுதாயத்தில் கட்டாய நிகழ்வாக ஏற்பட்டதென்றால் பொய் அதிகம் நிகழ்ந்ததனால் என்கிறார்.
"பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப"
(தொல்.கற்பு.143)
இந்நூற்பாவால் பொய்கூறலும், வழூஉப்பட ஒழுகலும் தோன்றிய பின்னர் தான் புரோகிதரை வைத்துச் செய்யும் மணம் ஏற்பட்டது என்பது புலனாகிறது. முதலில் அந்தணர், அரசர், வணிகர் என்று மூவர்க்கு மட்டும் நிகழ்த்தப்பட்டுப் பின்னர் வேளாண்மை செய்வோருக்கும் உரியதாயிற்று என்று குறிப்பிடுகிறார்.
இன்பத்தை முன்னிட்டுக் காதல் கொண்டனர், பெற்றோர் அறிந்தோ, அறியாமலோ காதல் மணம் செய்தனர். அக்காதலரின் களவு மணத்தைக் கற்பு மணமாகப் பெற்றோரோ, உற்றாரோ, உடனிருந்து செய்து வைத்தனர் என்கிறார் (பண்டிதர் அ.கி.நாயுடு, தொல்காப்பியர் கண்ட தமிழ்ச் சமுதாயம் ப.7)
நல்ல நாள் குறித்தல்
அகநானூற்றுப் பாடலில் திருமணத்திற்கு நல்ல நாள் பற்றியச் செய்தியும் காணப்படுகிறது.
கனையிருள் அகன்ற கவின்பெறு காலைக்
கோள்கால் நீங்கிய கொடுவெண் டிங்கள்
(அகநானூறு-86)
இச்செய்யுள் அடிகளில் தீய கோள்கள் தம்மைவிட்டு நீங்கப்பெற்று வளைந்த வெள்ளிய திங்களானது தீமையில்லாத சிறந்த புகழையுடைய உரோகிணி நாளிடத்தே வந்தெய்தியதாக என்று குறிப்பிட்டுள்ளனர்.
..........................தெள்ளொளி
யாங்க ணிருவிசும்பு விளங்கத் திங்கள்
சகட மண்டிய துகடீர் கூட்டத்து
(அகநானூறு-136)
இப்பாடலடிகளிலும் திருமண உறவுக்கு நல்ல நாள் குறிப்பிடப்பட்டுள்ளமையை அறிய முடிகின்றது. நல்ல நாளிலும், அதிகாலைப்பொழுதிலும் மணம் நடைபெற்றுள்ளது. வீர மணத்திலும் (மகட்பாற்காஞ்சி), (புறம்-18)-இல்) நல்ல நாள் தெரிவு செய்யப்பட்டது. முல்லை நில ஆயர்களும் ஏறுதழுவி வெற்றி பெற்ற பின்னரே திருமணத்திற்கான நாளைக் குறிக்கும் வழக்கம் இருந்துள்ளதைக் கலித்தொகை 102 ஆம் பாடல் கூறுகின்றது.
திருமணம் நிகழுமிடம்
சங்க காலத்தில் திருமணம் பெண் வீட்டிலேயே நடைபெற்றுள்ளதை அறிய முடிகின்றது. தலைவி உடன்போக்கு மேற்கொண்ட போதும் தலைவியின் தாய், தலைவனின் தாயிடம் உங்கள் வீட்டில் சிலம்பு கழிதல் சடங்கு நடைபெற்று முடிந்துவிட்டது. வதுவைச் சடங்காவது எம் வீட்டில் நடத்த வேண்டும் என்று கேட்பதை ஐங்குறுநூறு - 399 ஆம் பாடலின் மூலம் அறிய முடிகிறது. பழந்தமிழர் சமுதாயத்தில் திருமணம் பெண்வீட்டில் நடைபெறுவதே வழக்கமாக இருந்துள்ளது. இன்றும் பெரும்பாலான திருமண நிகழ்வுகள் பெண் வீட்டில்தான் நிகழ்த்தப்படுகின்றன.
இன்றைய மணம்:
தமிழர் திருமணங்கள் இன்றும் காலையில்தான் நடைபெறுகின்றன. ஆனால் ஒவ்வொரு இனத்திற்குத் தக்கவாறு சிறிது வேறுபாட்டுடன் காணப்படுகிறது. மேல் குலத்தாராகிய அந்தணர், அரசர், வணிகர் என்னும் மூன்று வருணத்தார்க்கும் உரிய கரணம், கீழோராகிய வேளாண்மை செய்பவருக்கும் உரியதாகிறது. 

அன்று திங்களுடன் உரோகிணி கூடிய நன்னாளில் திருமணம் நடைபெற்றது. இன்றும் நல்ல நாள், நல்ல நேரம் பார்த்துதான் திருமண நிகழ்வினை ஏற்பாடு செய்கின்றனர். சங்க இலக்கியக் காலத்தில் பெண்கள் கூடி நிகழ்வினைச் செய்துள்ளனர். தாலி அணிவித்த குறிப்புகள் இல்லை. காப்பிய காலத்தில் மங்கல நாண் அணிந்த குறிப்பு உள்ளது. (சிலம்பு) ஆனால் இன்று அனைத்துத் தமிழ்ச் சமுதாயத்திலும் தாலி அணிவிக்கின்ற பழக்கம் உள்ளது. புரோகிதர் வைத்துத் தான் திருமண நிகழ்வினையே நடத்துகின்றனர். புரோகிதர் மணம் ஆரியப் பண்பாட்டு கலப்பினால் வந்தது என்று கூறலாம். தமிழர் திருமணம் மனித உறவுநிலைகளைக் காண உதவும் அரிய நிகழ்வாகும். இரு குடும்பங்களின் தொடர்பினை ஒருங்கிணைக்கும் சாதனமாகும்.
முடிவுரை:
தமிழர் திருமணம் என்பது தனிமனித நிலையிலிருந்து சமூக நிலைக்குள் வளர்ந்து, நாடு முழுவதும் பரவிய பண்பட்ட வாழ்வியலின் தன்மையை எடுத்துக்காட்டுகிறது. தமிழ்ச் சமூகம் நாகரீக நிலைக்குத் தள்ளப்பட்டாலும், சங்க கால எச்ச மரபுகள் மனித வாழ்வியலில் இன்றும் பின்பற்றப்பட்டுள்ளதை மேற்கண்ட தரவுகளின் வழி அறிய முடிகிறது.
நன்றி: தொல்காப்பியம் காலமும் பண்பாடும்.

நன்றி: koodal.com

வெள்ளி, 13 செப்டம்பர், 2013

கால்ஷியம் அவசியம்...

கிட்டத்தட்ட 1 முதல் 1.3 கிராம் கால்சியம் நமக்கு தினசரி தேவை. தினசரி 2 கப் மோர், கொஞ்சம் சோயாகட்டி(TOFU), கீரை, 1கப் பீன்ஸ், 1 கப் பழச்சாறு சாப்பிட்டாலே இந்த 1 கிராம் கால்சியம் கிஅடைத்து விடும். பாலில் நிறைய கால்சியம் இருந்தாலும் பாக்கெட் பால் குறித்து பயம் நிறைய இருப்பதால் முடிந்தவரை தவிர்க்கலாம். மற்ற உணவிற்கு வாய்ப்பில்லாதவரும், மெனோபாஸ் நேரத்தில் ஆஸ்டியோபோரோஸிஸ் இருப்பாதாக...

ஏற்கனவே மருத்துவரால் சொல்லப்பட்டவரும் மட்டும், உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி பால் எடுங்கள்.

பழங்களில் அத்திப்பழம் கால்சியம் நிறைந்த ஒரு கனி. உலராத சீமை அத்தி இன்னும் சிறப்பு. கிட்டத்தட்ட ஒரு அத்தியில் 170கிராம் கல்சியம் உள்ளது. ஆரஞ்சு, வாழைப்பழம், கொய்யா, இவற்றிலும் கால்சிய சத்து கூடுதலாக உள்ளது. கீரைகளை எடுத்தால் வெந்தயக் கீரை, வெங்காயத் தாள் மிகச் சிறப்பு. காலிஃப்ளவரிலும் மிக அதிக அளவு கால்சியம் உள்ளது. முருங்கை, கொத்தமல்லி, முள்ளங்கிகீரை, பாலக் இவற்றிலும் கால்சியம் குறைவில்லாமல் உண்டு.

தானியங்களில் ராகிக்கு முதலிடம். கிட்ட்த்தட்ட 100கிராம் ராகியில் 380 மில்லி கிராம் கால்சியம் உள்ளது. அவ்வப்போது ராகி கஞ்சி/ராகி தோசை/ ராகி வெல்ல உருண்டை வீட்டில் இனி செய்யத் தவறாதீர்கள். கொள்ளு, ரஜ்மா இரண்டுமே சோயாவிற்கு இணையாக கால்சியம் உள்ளவை. ராகி ரொட்டிக்கு, ரஜ்மா குருமா பாலக் கீரை சேர்த்து தந்து, ஒரு கப் மோரோ அல்லது ஒரு கப் ஆரஞ்சு ஜூஸோ சாப்பிட்டால், அன்றைய தேவை கால்சியம் பூர்த்தி!

காய்கறிகளில் கேரட், வெண்டை, வெங்காயம், சர்க்கரைவள்ளிகிழங்கு இவற்றிலுள்ள சுண்ணாம்பு சத்து குறைவில்லாதது. புலால் சாப்பிடுபவருக்கு நண்டில் எக்கச்சக்கமாய் கால்சியம் கிடைக்கும். 100கிராம் நண்டில் 1600மிகி கால்சியமுள்ளது. அதே போல் மீனிலும் கால்சியம் மிக அதிகம். அது தான் நண்டு எலும்புக்கு நல்ல்துன்னு சொல்லிட்டாரே என அவசரப்பட வேண்டாம். அலர்ஜி உள்ளோருக்கு நண்டு உடம்பெங்கும் அரிப்பை தடிப்பை ஏற்படுத்திவிடலாம். “சைனிஸ் ஃபுட் சாப்பிடலாமுன் வந்தோம் சார்!..சாப்பிடும்போது இந்தியனாக இருந்தார்..இப்போது மூஞ்சு சைனிஸாகவே மாறிடுச்சு”, என்று சைனிஸ் ரெஸ்டரண்டுக்கு சமீபமாய் போய் பதறி வந்த நண்பர் பலரை எனக்குத் தெரியும்.

கால்சியம் என்றதும் பலருக்கும் அது எலும்புக்கு நல்லது என்ற கருத்துதான் தெரியும். கால்சியம் இதய துடிப்பிற்கு, தசை வலுவிற்கு, இரத்த கொதிப்பு சீராக இருக்க , இரத்த நாளங்களில் புண்ணாகாமல் இருக்க என பல பணிகளுக்கு மிக அவசியம். உடல் சோர்வு போக்க உடனடி கால்ஸியம் மட்டுமே மருந்தும் கூட. கால்சியம் உடலில் சேர விட்டமின் டி சத்து ரொம்ப அவசியம். இப்போது விட்டமின் கே2, மக்னீசியமும் அவசியம் என்கிறார்கள். விட்டமின் டி சத்து எந்த ஆட்சிக்கு வந்தாலும் இலவசமாய் கிடைக்கும். கொஞ்ச நேரம் வெயிலில் நிற்க வேண்டும் அவ்வளவுதான் 15 நிமிட சூரியஒளி போதும்.

சுண்ணாம்புச்சத்து குறைவால், விழாமலே வரும் எலும்பு முறிவுகள் இன்று அதிகம். ஷாப்பிங் போவது மாதிரி மருந்துக்கடைக்கு போய் பல மருந்தை வாங்கி விருந்தாய் சாப்பிடுவோருக்கும் கால்சியம் குறையும். குறிப்பாய் ஸ்டீராய்டு மருந்து சாப்பிடுவோருக்கு இந்த வாய்ப்பு அதிகம். மாதவிடாய் முடிவில், குழந்தைப்பேற்றில் பாலூட்டும் போது, கால்சியம் குறையும். இவர்கள் எல்லோருக்குமே கூடுதல் கால்சியம் ரொம்ப ரொம்ப அவசியம். உணவில் அதை தேர்ந்து எடுத்து சாப்பிடுவது அவசியம். டாக்டர் சொன்னப்புறம் பார்த்துக்கலாம் என இராமல் 20 வயதுகளிலேயே இதில் கவனாமாயிருப்பது நல்லது!

புதன், 28 ஆகஸ்ட், 2013

திரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து


இன்றைய காலத்தில் கடினமாக உழைப்பதை விட, புத்திசாலித்தனமாக வேலையை முடிப்பதே மிகவும் முக்கியம். அதைப்போல் நமது பிரச்சனைகளை சரியாகத் தீர்க்கும் விதமாக எதையும் கையாள வேண்டியுள்ளது. இதற்கு உடலும் உள்ளமும் முழுத் தகுதியுடன் இருந்தால் தான் இவை சாத்தியமாகும். உடலும் உள்ளமும் முழுத்தகுதியுடன் விளங்குவதற்கு, அன்றாட வேலைகளை ஒரு ஒழுங்கு முறையுடன் செய்து வர வேண்டும். முறையான மற்றும் கட்டுப்பாடான உணவுப்பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். வாழ்க்கையை உடலளவில் மிகவும் வசதியான முறையில் வாழ்கிறோம். ஆனால், மனதளவில் மிகவும் அழுத்தம் நிறைந்த வாழ்க்கையை தான் வாழ்கிறோம். இத்தகைய வாழ்க்கை முறை சீக்கிரமாகவே முதுமையாக உணர வைத்து விடும் அல்லது பல நோய்களுக்கு வழிவகுக்கும்.

திரிபலா என்றால் என்ன?
திரிபலா என்பது பாரம்பரிய ஆயுர்வேத மருந்து. இது ஒரு ரசாயனமாகவும், காயகல்பமாகவும் கருதப்படுகிறது. மூன்று மூலிகைகள் சேர்ந்த கூட்டுப்பொருள் தான் திரிபலா. அம்மூன்று மூலிகைகளாவன நெல்லிக்காய் (Emblica officinalis),கடுக்காய் (Terminalia chebula) மற்றும் தான்றிக்காய் (Terminalia belerica) ஆகும்.

திரிபலா எப்படி நமக்கு உதவுகின்றது?
திரிபலா என்பது அற்புதமான ஆயுர்வேத மருத்துவத் தயாரிப்பு ஆகும். ஆயுர்வேத மருத்துவர்களால், உலகம் முழுவதும் பரவலாக எந்த நோய்க்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுவது திரிபலா. சர்க சம்ஹிதா என்னும் ஆயுர்வேத நூலில் முதல் அத்தியாயத்திலேயே திரிபலாவைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான விஷயமாகும். நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய இம்மூன்றின் கலவையானது அற்புதமான காயகல்பமாகி, தேவர்களின் அமிர்தத்தினைப் போல் எந்த ஒரு வியாதியையும் தீர்க்கும் அற்புத சக்தியினைப் பெற்றுள்ளது.

நோய் எதிர்ப்புச் சக்தி
ஆயுர்வேதத்தில் திரிபலா என்பது இளமையை பாதுகாக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது நமக்கு முதுமைத் தன்மையை நீக்கி இளமைத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் என்று பொருள். இது உடல் ஆரோக்கியத்தினை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டவும் உதவுகிறது. ஆரோக்கியமான வாழ்வில் நோய் எதிர்ப்புச் சக்தி என்பது ஒரு முக்கியமான அங்கமாகும். இது எப்போதுமே அதிகமாகவே இருக்க வேண்டும். நமது உடலில் இயற்கையாகவே அமைந்திருக்கும் தடுப்பு அரண்களைத் தாண்டி, உடலின் உள்ளே நுழையும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் 'ஆன்டிபாடி' (antibodies) எனப்படும் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய, இந்த திரிபலா உதவுகிறது.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்
 உடலில் செல்களுக்கிடையில் நடைபெறும் வளர்ச்சிதை மாற்றத்தில், சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்டாக திரிபலா செயலாற்றுகிறது. நமக்கு முதுமையைத் தரும் முக்கியமான காரணியான "கட்டற்ற காரணிகளை" (free radicals) உற்பத்தி செய்யும் வாய்ப்பைக் குறைக்கிறது. மேலும் செல்கள் முறையாகச் செயல்படுவதற்கு முக்கியமாகத் தேவைப்படும் மைட்டோகாண்டிரியா, கோல்கை உறுப்புகள், உட்கரு ஆகியவை சிறப்பாகச் செயல்படுவதையும் திரிபலா தூண்டுகிறது.

செரிமானமின்மை
 செரிமானக் கோளாறுகளை திரிபலா அற்புதமாக குணப்படுத்துகிறது. அதிலும் உணவுப்பாதையில், மலத்தினை வெளித்தள்ளும் குடலியக்கத்தை சீராக செயல்பட வைக்கிறது. மேலும் இரத்தத்தில் உள்ள கொழுப்பினை கரைக்க தேவைப்படும் பைல் (Bile) திரவத்தினை கல்லீரலிலிருந்து சுரக்கவும் உதவுகிறது. உணவுப்பாதையில் தேவையான கார அமிலநிலையை (pH level) தேவையான நிலையில் பேணுவதற்கும் துணை புரிகிறது.
 

மலச்சிக்கல்
 திரிபலா ஒரு சிறந்த குடல் சுத்திகரிப்பானாகச் செயல்படுகிறது. மலச்சிக்கலுக்கு அதிகமாகப் பரிந்துரைக்கப்படும் இயற்கை மருந்து திரிபலாவாகும். உடலிலுள்ள நச்சுப்பொருட்களை நீக்கும் நச்சு நீக்கியாகவும் இது செயலாற்றுகிறது. சிறந்த மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.


வயிற்றுப் பூச்சிகளும் தொற்றுகளும்
 வயிற்றில் பூச்சி வளர்வதையும், தொற்றுக்களையும் கட்டுப்படுத்தும் சக்தி வாய்ந்தது தான் திரிபலா. குறிப்பாக வயிற்றிலிருந்து நாடாப்புழுக்களையும், வளையப்புழுக்களையும் வெளியே அகற்றுவதற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் உடலில் பூச்சிகளும், நுண்கிருமிகளும் வளர்வதற்கு உதவாத நச்சு நிலையை உடலில் பேணுவதற்கு திரிபலா உதவுகிறது.
 

இரத்தசோகை
 இரத்தத்தில் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க திரிபலா உதவுகிறது. இதன் மூலம் இரத்த சோகை என்னும் நோயைத் தீர்க்க முடியும். (இரத்த சோகை என்பது இரத்தத்தில், ஹீமோகுளோபின் எனப்படும் இரத்த சிவப்பு அணுக்களின் அளவு குறைந்து காணப்படும் நிலையாகும்).


சர்க்கரை நோய்
 திரிபலா சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு மிக்கது. நமது கணையத்தினைத் (pancreas) தூண்டி, இன்சுலினை சுரக்கச் செய்கிறது. கணையத்தில்தான் இன்சுலினைச் சுரக்கும் லாங்கர்ஹான் திட்டுக்கள் (langerhans) எனப்படும் சுரப்பிகள் உள்ளன. மேலும் உடலில் குளுகோஸின் அளவை சமநிலையில் பேணுவதில் பெரும் பொறுப்பு வகிப்பது இன்சுலின் ஆகும். மேலும் திரிபலா கசப்புச் சுவையுடன் இருப்பதனால், சர்க்கரை நோயின் ஒரு நிலையான ஹைப்பர்கிளைசீமியா (hyperglycemia) எனப்படும் அதிக சர்க்கரை நிலையில், இதனை எடுத்துக் கொள்வது சிறப்பானது.
 
உடல்பருமன்
 இயல்பை விட உடல் பருமனானவர்கள், திரிபலாவை உட்கொள்வது மிகவும் பயன்தரும். இதனுடைய மருத்துவக் குணத்தினால் உடலிலுள்ள கொழுப்பின் அளவினைக் குறைக்க முடியும். நமது உடலில் கொழுப்பு படிவதற்குக் காரணமான அடிபோஸ் செல்களைக் குறி வைத்து செயல்படுவதால், கொழுப்பின் அளவு குறைகிறது. இதன் மூலம் உடல் பருமன் கட்டுப்படுத்தப்படுகிறது.
 

சருமப் பிரச்சனைகள்
 இது இரத்தத்தினைச் சுத்தம் செய்து இரத்தத்திலுள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றும் தன்மை கொண்டிருப்பதால், சரும நோய்களுக்கான மருத்துவத்தில் பெரும் பங்காற்றுகிறது. இரத்தத்தினைச் சுத்திகரிக்கும் தன்மை கொண்டிருப்பதால், தொற்று நோய்களையும் தீர்க்கும் குணம் கொண்டுள்ளது.
 

சுவாசக் கோளாறுகள்
 சுவாசப் பாதையிலுள்ள அடைப்புகளை நீக்கி சீரான சுவாசம் ஏற்பட பெரிதும் உதவுகிறது. சைனஸ் என்னும் நோயைத் தீர்க்கும் மருந்தாகவும் இது செயல்படுகிறது. மேலும் நமது சுவாசப்பாதையிலுள்ள சளியில் பாக்டீரியாக்கள் வளராமலும் இது தடுக்கிறது.

 
தலைவலி
 தலைவலிக்கு நிவாரணமாகவும் திரிபலா பயன்படுகிறது. குறிப்பாக வளர்சிதை மாற்றத்தின் இடையூறுகளால் உண்டாகும் தலைவலிக்கு சிறப்பான நிவாரணத்தை அளிக்கிறது.

 
புற்று நோய்
 புதுடில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வுகளின் படி, திரிபலாவுக்கு புற்றுநோயைக் குணப்படுத்தும் திறன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் செல்களில் மைட்டேடிக் நிலையில் ஸ்பிண்டில் வடிவத்தோற்றம் உண்டாவதைக் குறைக்க உதவி செய்கிறது. அதன்மூலம், புற்றுநோய் செல்களில் மெடாஸ்டேடிஸ் (metastasis) வளரும் அபாயத்தையும் குறைக்கிறது.