புதன், 31 ஜூலை, 2013

கபிலரின் பூக்கள் - 06 - வெட்சி - Ixora coccinea

வெட்சி மலர்




தாவரப்பெயர்: Ixoreae

வளரியல்பு: குட்டை செடி

 தற்போதைய பெயர்: இட்லிப் பூ, தெச்சி 

இலக்கியம் :
உச்சிக் கொண்ட ஊசி வெண்தோட்டு வெட்சி மாமலர் - புறநானூறு 100-5
பொருள்: அதியமான் போர்க்கோலம் பூண்டபோது போந்தை(பனை), வெட்சி, வேங்கை ஆகிய மூன்று பூக்களையும் கலந்து கட்டிய கண்ணியைத் தலையில் சூடியிருந்தான்.

செங்கால் வெட்சி - திருமுருகாற்றுப்படை 21
பொருள்: முருகப்பெருமானை வழிபட்ட சூரர மகளிர் சூடியிருந்த மலர்களில் சிவந்த காம்பினைக் கொண்ட வெட்சியும் இருந்தது. 

குறிஞ்சிப்பாட்டு 63
பொருள்: குறிஞ்சிநிலக் கோதையர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று வெட்சி.

இதல் முள் ஒப்பின் முகை முதிர் வெட்சி - அகநானூறு 133-14
பொருள்: காடைப் பறவையின் கால்நக முள் போல வெட்சிப்பூ முதிரும். 

புறநானூறு 202-1
பொருள்: வெட்சிக்கானத்தில் வேட்டுவர் கடம்பு மானைத் துரத்திப் பிடிப்பர்.

ஈர் அமை வெட்சி இதழ் புனை கோதையர் - பரிபாடல் 22-22
பொருள்: வையையில் நீரீடச் சென்ற மகளிர் வெட்சிப் பூவைத் தலையில் அணிந்திருந்தனர்.

புல்லிலை வெட்சி - கலித்தொகை 103-2
பொருள்: ஏறு தழுவச் சென்றபோது, இடையர் குலக் காளையர் சூடியிருந்த பன்மலர்க் கண்ணியில் வெட்சிப்பூ அதன் இலைகளுடன் சேர்த்துத் தொடுக்கப்பட்டிருந்த்து.

வெட்சி நிரை கவர்தல் - சங்க காலத்தில் எதிரி நாட்டுடன் போர் புரிய விரும்புவதை சூசகமாக தெரிவிக்க அந்த நாட்டு பசுக்களை கவர்ந்து வருவர், அப்போது வெட்சி பூவை சூடிச்செல்வர்.

தன்மைகள்: 
வெட்சி என்பது ஒருவகைக் காட்டுப்பூ. அழகுக்காக வீடுகளிலும் வளர்க்கப்படுகிறது.

நன்றி: விக்கிபீடியா, http://www.flowersofindia.net/

குறுந்தொகையின் அழகு

இன்று நான் படித்த இந்த குறுந்தொகை பாடலை உங்களுடன் பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.




பாடல்:
"யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
நீயும் யானும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே" -
செம்புலப் பெயல்நீரார்


 
இதை அழகு என்று சொல்வதா அல்லது நளினம் என்று சொல்வதா என்று தெரியவில்லை. ஒரு தலைவன் தலைவியிடம் அளவளாவும் இடம் என எடுத்துக்கொள்ளலாம்.

பொருள்:

உன் தாயும் என் தாயும் தொடர்பு முறையில் யாராவார்கள்?

உன் தந்தையும் என் தந்தையும் எந்த முறையில் உறவினர் ஆவர்?

நீயும் நானும் எந்த வகையில் அறிமுகமானோம்?

அனால், செம்மண் பூமியில் விழுந்த மழை போல 

அன்பு கொண்ட நம் இருவரின் இதயங்களும் ஒன்றாக கலந்தனவே.

மழையின் சிறப்பு - திருக்குறள்

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை. (12)

                                                                   -திருவள்ளுவர் 


சாலமன் பாப்பையா உரை:நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையே.

 தானே உணவாகி = துப்பு ஆய*
 மற்ற உணவுக்கும் காரணமாகி = துப்பு ஆக்கி

Translation:The rain makes pleasant food for eaters rise;
As food itself, thirst-quenching draught supplies.


Explanation:
Rain produces good food, and is itself food.

 

புதன், 24 ஜூலை, 2013

கபிலரின் பூக்கள் - 05 - குறிஞ்சி - Strobilanthes kunthiana

மலர்: குறிஞ்சி






தாவரப்பெயர்: Strobilanthes kunthiana

வளரியல்பு: புதர் வகை

தன்மைகள்:
இந்த பூக்கள் நீல நிறத்தில் பூக்க கூடியது. கடல் மட்டத்திலிருந்து 1300 முதல் 2400 மீ. உயரத்தில் வளரும் இச்செடி, பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறையே பூக்கும். பொதுவாக 30 முதல் 60 செ.மீ. உயரம் வரை வளரும் இது, இதற்கேற்ற தட்பவெட்ப சூழ்நிலை இருந்தால் 180 செ.மீ. உயரம் வரையிலும் வளரும்.

சிறப்புகள்:
•12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டு்மே பூப்பது குறிஞ்சியின் சிறப்பு
•பழந்தமிழர்களின் நிலவகை பகுப்பில் மலையும் மலை சார்ந்த நிலமும் "குறிஞ்சி" தினையாக குறிக்கப்படுகின்றன.
•இது தமிழரின் மலை நிலத்துக்கும் இந்தச் செடிகளுக்குமிடையேயான பிணைப்பை காட்டுகிறது.

நன்றி: விக்கிபீடியா, http://www.flowersofindia.net/

செவ்வாய், 23 ஜூலை, 2013

போர்களுக்கு போகும் போது வீரர்கள் சூடிய மலர்கள்

போர் முறைகளில் தமிழர்கள் உலகத்திற்கு வழிகாட்டியாக விளங்கினார்கள் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும்,சங்க காலத்தில் போர்களுக்கு போகும் போது வீரர்கள் சூடிய மலர்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

வெட்சி நிரை கவர்தல் ; மீட்டல் கரந்தையாம்
வட்கார் மேல் செல்வது வஞ்சி ; உட்காது
எதிர்ஊன்றல் காஞ்சி ; எயில்காத்தல் நொச்சி
அது வளைத்தல் ஆகும் உழிஞை - அதிரப்
பொருவது தும்பையாம் ; போர்க்களத்து மிக்கோர்
செரு வென்றது வாகையாம் - புறநானூறு (9)


வெட்சி பூ (நிறை கவர்தலின் போது சூடும் பூ) அதாவது சங்க காலத்தில் எதிரி நாட்டுடன் போர் புரிய விரும்புவதை சூசகமாக தெரிவிக்க அந்த நாட்டு பசுக்களை கவர்ந்து வருவர், அப்போது வெட்சி பூவை சூடிச்செல்வர்.


கரந்தை பூ - அப்படி எதிரி நாட்டவர் வந்து கவர்ந்து செல்ல முயலும் போது அதை தடுக்க வரும் வீரர்கள் அணிந்திருக்கும் பூவின் பெயர்.


வஞ்சி - எதிரி நாட்டு படையை முற்றுகையிடும் போது சூடப்படும் பூ.



காஞ்சி - போர் நடக்கும் போது போரில் கலந்து கொள்ளாதவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களை காப்பவர்கள் அணிவது.



உழிஞ்சை பூ- எதிரியின் கோட்டையை தகர்க்கும் போது அணிவது.

உழிஞ்சை பூவின் படம் கிடைக்கவில்லை.

நொச்சி - கோட்டையை தகர்க்க வருபவர்களுடன்,போரிடுபவர்கள் அணிவது.



தும்பை - போர் மிக உக்கிரமாக நடப்பதை குறிக்கும் மலர்.



வாகை - வெற்றி பெற்றதை குறிக்கும் மலர்.



பாடாண் - அரசனின் வெற்றியை போற்றி பாடி பரிசில் பெற புலவர்கள் வரும்போது சூடும் மலர்.


நன்றி: விக்கிபீடியா, http://www.flowersofindia.net/, Flickr

மலர்களின் பருவநிலைத் தமிழ்ப்பெயர்கள்

1. அரும்பு - அரும்பும் (தோன்றும்) நிலை
2. நனை - அரும்பு வெளியில் நனையும் நிலை
3. முகை - நனை முத்தாகும் நிலை
4. மொக்குள் - "முகை மொக்குள் உள்ளது நாற்றம்" - திருக்குறள் (நாற்றத்தின் உள்ளடக்க நிலை)
5. முகிழ் - மணத்துடன் முகிழ்த்தல்
6. மொட்டு - கண்ணுக்குத் தெரியும் மொட்டு
7. போது - மொட்டு மலரும்பொழுது காணப்படும் புடைநிலை
8. மலர் - மலரும் பூ
9. பூ - பூத்த மலர்
10. வீ - உதிரும் பூ
11. பொதும்பர் - பூக்கள் பலவாகக் குலுங்கும் நிலை
12. பொம்மல் - உதிர்ந்து கிடக்கும் புதுப்பூக்கள்
13. செம்மல் - உதிர்ந்த பூ பழம்பூவாய்ச் செந்நிறம் பெற்று அழுகும் நிலை

ஞாயிறு, 21 ஜூலை, 2013

கபிலரின் பூக்கள் - 04 - குவளை - Nymphaea odorata ait

மலர்: குவளை



தாவரப்பெயர்: Nymphaea odorata ait

வளரியல்பு: குட்டை செடி

இலக்கியம் :
காணிற் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழைக் கண்ணொவ்வோம் என்று. - திருக்குறள்

குவளை . . . கொடிச்சி கண்போன் மலர்தலும் (ஐங்குறு. 299)

செங்கழுநீர். விளக்கிட் டன்ன கடிகமழ் குவளை (சீவக. 256)

ஒரு பேரெண். நெய்தலுங் குவளையு மாம்ப லுஞ் சங்கமும் . . . நுதலிய செய்குறியீட்டம் (பரிபா. 2, 13).


நன்றி: விக்கிபீடியா, Tamil Lexicon

வெள்ளி, 19 ஜூலை, 2013

கபிலரின் பூக்கள் - 03 - அனிச்சம் - Anagallis arvensis

மலர்: அனிச்சம்  



தாவரப்பெயர்: Anagallis arvensis ssp. foemina 
வளரியல்பு: குட்டை செடி 

இலக்கியம் :
* மோப்பக்குழையும் அனிச்சம் – திருக்குறள்
* நன்னீரை வாழி அனிச்சம் – திருக்குறள்
* அனிச்சப்பூக் கால்களையாள் – திருக்குறள்
* அனிச்ச மாமலர் – கந்தபுராணம்
இன்னும் பல .

தன்மைகள்:
மிகவும் மென்மையான இதழ்களினை உடைய ஒரு பூக்களைக் கொண்ட ஒரு தாவர இனம்.

நன்றி: விக்கிபீடியா, http://www.flowersofindia.net/

கபிலரின் பூக்கள் - 02 - ஆம்பல் - Nymphaea lotus

மலர்: ஆம்பல் 


தாவரப்பெயர்: Nymphaea lotus
வளரியல்பு : நீர்வாழ் தாவரம் 

இலக்கியம் : பொய்கை ஆம்பல் அணி நிறக் கொழுமுகை (குறுந்தொகை 370)

தன்மைகள் : ஆம்பல் சற்று கூர்மையான இதழ்களைக் கொண்டது.

நன்றி: விக்கிபீடியா, http://www.flowersofindia.net/

கபிலரின் பூக்கள் - 01 - ஒண்செங் காந்தள் - Gloriosa superb

மலர்: ஒண்செங் காந்தள்


தாவரப்பெயர்: Gloriosa superb
வளரியல்பு: கொடி

தன்மைகள்:

கார்த்திகை மாதத்தில் மலர்வதால் கார்த்திகைப் பூ என்றும் அழைக்கப்படுகின்றது.

தளை அவிழ்ந்த மலர் ஏழு நாட்கள் வாடாமல் இருக்கும். இதழ்களில் நிறம் முதலில் பச்சை, பிறகு வெண்மை கலந்த மஞ்சள். பிறகு மஞ்சள், பிறகு செம்மஞ்சள், பிறகு துலக்கமான சிவப்பு (Scarlet) நீலம் கலந்த சிவப்பாக மாறிக்கொண்டு போகும்


சிறப்பு:

செங்காந்தள் அல்லது கார்திகைப்பூ ஜிம்பாவ்வே நாட்டின் தேசிய மலராகும். தமிழ்நாட்டின் மாநில மலராகவும் ஏற்கப்பட்டுள்ளது. தமிழீழத்தின் மலராகவும் ஏற்கப்பட்டுள்ளது.

நன்றி: விக்கிபீடியா, http://www.flowersofindia.net/

கபிலரின் பூக்கள் (Tamil Flowers – Kurunjppaatu - Kabilar)




2000 வருடங்களுக்கு முன்பு பாடப்பட்ட கபிலரின் குறிஞ்சிப்பாட்டு - 99 பூ பெயர்கள் 

வள்இதழ்
ஒண்செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்
தண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி
செங்கொடு வேரி,தேமா, மணிச்சிகை
உரிதுநாறு அவிழ்தொத்து உந்தூழ் கூவிளம் (65)
எரிபுரை எறுழம், சுள்ளி, கூவிரம்
வடவனம், வாகை, வான்பூங் குடசம்
எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை
பயினி, வானி, பல்லிணர்க் குரவம்,
பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, (70)
விரிமலர் ஆவிரை, வரல், சூரல்,
குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி,
குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,
போங்கம் , திலகம், தேங்கமழ் பாதிரி,
செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம், (75)
கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத்
தில்லை, பாலை, கல்இவர் முல்லை,
குல்லை பிடவம், சிறுமா ரோடம்,
வாழை வள்ளி நீள்நறு நெய்தல்
தாழை தளவம் முள்தாள் தாமரை (80)
ஞாழல், மௌவல், நறுந்தண் கொகுடி,
சேடல், செம்மல், சிறுசெங் குரலி
கோடல், கைதை, கொங்குமுதிர் நறுவழை
காஞ்சி, மணிக்குலைக் கள்கமழ் நெய்தல்,
பாங்கர், மராஅம், பல்பூந் தணக்கம், (85)
ஈங்கை, இலவம், தூங்குஇணர்க் கொன்றை
அடும்புஅமர் ஆத்தி, நெடுங்கொடி அவரை,
பகன்றை, பலாசம், பல்பூம் பிண்டி,
வஞ்சி, பித்திகம், சிந்து வாரம்,
தும்பை, துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி, (90)
நந்தி, நறவம், நறும் புன்னாகம்,
பாரம், பீரம், பைங்குருக் கத்தி,
ஆரம் காழ்வை கடிஇரும் புன்னை,
நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,
மாஇருங் குருந்தும், வேங்கையும் பிறவும், (95)
அரக்குவிரிந் தன்ன பருஏர்அம் புழகுடன்
மால்அங்கு உடைய மலிவனம் மறுகி,
வான்கண் கழீஇய அகல்அறைக் குவைஇ(98)
- கபிலர்